அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் டி.ஜெயக்குமார் பாட்டுப்பாடினார்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திரு.வி.க.நகரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது டி.ஜெயக்குமார் பேசியதாவது:-
திமுக அரசு ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் மக்களை பழி வாங்க வேண்டும் என்ற வகையிலும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையிலும், ஆளும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு , மின்சார கட்டண உயர்வு என்று பல பரிசுகளை மக்களுக்கு அளித்துள்ளது.
இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, கட்ட பஞ்சாயத்து அதிகரித்துள்ளது..
அ.தி.மு.க. ஆட்சியின் போது நிதி நெருக்கடி ஏற்பட்ட போதும் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை…..
இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது கோவிலில் மணிசத்தம் ஒலித்தது. இதனால் தனது பேச்சை சிறிது நேரம் நிறுத்தினார். அதனை தொடர்ந்து பேசிய டி.ஜெயக்குமார், “நல்ல சகுணம் தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு செல்ல போகுது” என்றார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது வெயில் வாட்டி வதைத்தது. தி.மு.க.அரசுக்கு எதிராகவும், ,மின் கட்டண உயர்வை கண்டித்தும் குரல் எழுப்பினார்கள்.கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வெயில் காரணமாக சோர்ந்து போன நிலையில் காணப்பட்டனர், அப்போது டி.ஜெயக்குமார், மலைக்கள்ளன் திரைப்படத்தில் வரும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… என்ற பாடலை பாடி வெயிலில் வாடிய தொண்டர்களை உற்சாகமடைய வைத்தார்.
ஆர்ப்பாட்டம் முடிந்த்ததும் செய்தியாளர்களை டி.ஜெயக்குமார் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில். “மக்கள் நல பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் விளம்பரத்தில் கவனம் செலுத்தும் அரசாகவே தி.மு.க. அரசு செயல்படுகிறது,.ஓ.பன்னீர்செல்வம் என்பவர் ஒரு கோஷ்டி, கட்சி அல்ல. கோஷ்டிக்கும் கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது. அவருக்கு தொண்டர்கள் ஆதரவும் இல்லை.மக்கள் ஆதரவுமில்லை. வஞ்சகன் என்ற தினகரனோடு கூட்டுசேர்ந்து பாழாய் போய்விட்டார். அ.தி.மு.க. சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது, தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.







