திருமண பத்திரிகையில் 9௦௦ குடும்பத்தினர் பெயர்களை அச்சடித்த ஊராட்சி மன்ற தலைவர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகே உள்ள மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். 2-வது தடவையாக இவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
ஊராட்சி தலைவர் ரமேஷ் மகள் ஷாலினி- கைலாஷ் திருமண விழா கும்பகோணத்தில் இன்று (ஜூன் 24)நடைபெற்றது.
இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சடித்த ரமேஷ், அதில் ஊர் மக்களின் பெயர்களையும், உறவினர்களின் பெயர் போல் அச்சடித்து அனைவருக்கும் வழங்கியது ஆச்சியத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்லபுரம் ஊராட்சியில் மல்லபுரம், கச்சுகட்டு, திருமலைராஜபுரம், கீழ திருமலைராஜபுரம், வில் வேலங்குடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 900 குடும்பங்கள் உள்ளன. அங்குள்ள 900 குடும்பத்தினருக்கும் வீடு வீடாக சென்று தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறார்.
அவர் அளித்துள்ள திருமணஅழைப்பிதழில் 900 குடும்பத்தின் தலைவர் மற்றும் தலைவி பெயர்களை, தங்கள் நல்வரவை விரும்பும் உறவினர்கள் என அச்சடித்து இருந்தார். இதை பார்த்து நெகிழ்ந்து போன ஊர் மக்கள் இன்று திருமணவிழாவில் திரளாக கலந்து கொண்டனர்.
உறவினர்களே அழைப்பிதழ்களில் பெயர் போடுவதற்கு யோசிக்கும் இந்த காலகட்டத்தில் ஜாதி, மதம் கட்சி என எவ்வித பாகுபாடின்றி ஊர் மக்கள் அனைவரின் பெயரையும் தனது குடும்ப திருமண அழைப்பிதழில் அச்சடித்து அனைவரும் ஒரே குடும்பம் என்ற மகிழ்ச்சியை தந்துள்ளார் என்று மக்கள் புகழாரம் சூட்டினர்.







