• November 29, 2026

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது

 திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது

சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவினர் மாலை 4.30 மணிக்கு மலையில் உள்ள தூண் பகுதிக்கு வந்தனர்.

ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், அவர்களது முன்னிலையில், பக்தர்களின் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக தூணைச் சுற்றிலும் மரங்களால் சாரம் கட்டப்பட்டு, அதன் மேல் நின்று விளக்கேற்றுவதற்கு ஏதுவாகப் பலகைகள் அடிக்கப்பட்டு தீப மேடை தயார் நிலையில் வைக்கப்பட்டது.

மேலும், தீபம் ஏற்றுவதற்கு 30 கிலோ நெய், திரி தயாரிப்பதற்கான 50 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் மற்றும் மண்பானைகள் பயன்படுத்தப்பட்டன.

திருவண்ணாமலையிலிருந்து வந்த பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் 6 பேர் குழுவினர், மண்கலயங்களை வைத்து காடா துணிகளைக் கொண்டு திரிகளைத் தயாரித்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தீபம் ஏற்றும்போது தொல்லியல் துறை அதிகாரி அறவாழி தலைமையிலான குழுவினரும், கோவிலின் நான்கு ஸ்தானிக பட்டர்களும் மலை உச்சியில் இருந்தனர்.ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகிய இருவரும் மலையேறி வந்து தீபம் ஏற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

மலை மீதிருந்து வெளியான காட்சிகளில், மலையில் உள்ள தூணில் ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டு அதில் எண்ணெயில் நனைந்த திரி வைக்கப்பட்டுள்ளது.

அந்த விளக்கில் நெய் ஊற்றப்பட்டு பிறகு அதற்குள் அடுக்கடுக்காக மூன்று மண்கலயங்கள் வைத்து முழுக்க நெய் ஊற்றி பெரிய அகல் விளக்கிலிருந்து திரி பகுதி மண் கலயங்களை மறைத்தவாறு மேலே ஒன்றிணைத்து கோபுரம் கோல கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட துணிகளுக்குள் சூடங்கள் இணைக்கப்பட்டு சரியாக 5 மணிக்கு இங்கு தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் மற்றும் மலையடிவாரத்தில் இருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *