ஓட்டப்பிடாரம் அருகே 2 பைக்குகள் மோதல் :கல்லூரி மாணவர் பலி
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள குலசேகரநல்லூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் யுவன் சங்கர் ராஜா (வயது 18). இவர் திருநெல்வேலி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தாய் முத்துமாரி (45) பராமரிப்பில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று மாலை யுவன் சங்கர் ராஜா தனது தாய் முத்துமாரியுடன் பைக்கில் புதியம்புத்தூர் வழியாக தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சில்லாநத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக்கும் யுவன் சங்கர் ராஜா ஓட்டி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் யுவன் சங்கர் ராஜா, அவரது தாய் முத்துமாரி மற்றும் நயினார்புரத்தைச் சேர்ந்த கார்மேகன் மகன் லட்சுமணன் (30) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர்.
அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்த மூவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த யுவன் சங்கர் ராஜா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.







