• November 16, 2026

முதுமலை வனப்பகுதியில் அத்துமீறிய அமைச்சர் வன்னியரசு  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; டிடிவி தினகரன் வலியுறுத்தல்

 முதுமலை வனப்பகுதியில் அத்துமீறிய அமைச்சர் வன்னியரசு  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; டிடிவி தினகரன் வலியுறுத்தல்

நீலகிரி, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள், அமைச்சர் வன்னியரசு பதிவிட்ட ட்ரெக்கிங் வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 10-ம் தேதி முதுமலைக்கு வந்த அமைச்சர் வன்னியரசு புலியை நோக்கி ஓடியது, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்திருந்தது போன்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சருக்கு மட்டும் அனுமதி எப்படி என சர்ச்சை வெடித்துள்ளது

இது குறித்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-;-

முதுமலை வனப்பகுதிக்குள் புலியை விரட்டியதோடு, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்து வீடியோ எடுத்து, அதனைச் சமூக வலைத்தளங்களில் Reels-ஆகப் பதிவிட்டுள்ள சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசின் செயல், சமூகநீதிப் போராளிகளுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறைக்கும், வனப்பகுதிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாத அமைச்சர் வன்னியரசு, வனத்துறை அதிகாரிகள் படைசூழ வனப்பகுதிக்குள் எவ்வாறு வலம் வந்தார் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களில் அவர் ஈடுபடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் அனுமதித்தது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளது.

தவெக ஆட்சியில் ஆளுங்கட்சியினரின் நிர்வாகிகள் தொடங்கி, சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்-அமைச்சர் வரை அனைவரும் Reels மோகத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியில் பங்கெடுத்துள்ள விசிக அமைச்சரும் தனது பங்கிற்கு Reels எடுத்தே தீர வேண்டும் என்பதற்காக, வனவிலங்குகளின் இயல்பான அமைதியையும் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் செயல்களில் இறங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

அமைச்சராக இருந்தால் வனவிலங்குகளை விரட்டுவதற்கும், அவற்றின் இயல்பான வாழ்விடங்களுக்குள் அத்துமீறி நுழைவதற்கும் ஏதேனும் சிறப்புச் சட்ட விலக்கு இருக்கிறதா? வனவிலங்குகளைத் துன்புறுத்துவோர் மீது பாயும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், அமைச்சர் வன்னியரசு மீதும் பாயுமா? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

எனவே, முதுமலை வனப்பகுதிக்குள் நுழைந்து வனவிலங்குகளை அச்சுறுத்தும் வகையில் அத்துமீறியதாக அமைச்சர் வன்னியரசு மீது எழுந்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், அமைச்சர் உட்பட இதற்குத் துணைபோன அனைத்து வனத்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறி உள்ளார்,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *