போக்குவரத்து சிக்னலில் விபரீதம்: சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி
கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 6-வது தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் மூர்த்தி (வயது 48). இவர் இன்று கோவில்பட்டி புது ரோட்டில் இருந்து தனது சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அரசு மருத்துவமனை தாண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே எட்டயபுரம் சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னலை கடந்து எதிர்புறம் ஜோதி நகர் நோக்கி சென்றார்.

அப்போது எட்டயபுரம் சாலையில் வடக்கே இருந்து வந்த டிப்பர் லாரி, மோதியது. இதில் மூர்த்தி நிலைதடுமாறி லாரியின் சக்கரத்திற்குள் விழுந்தார்.
லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் மூர்த்தி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூர்த்தி உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவ்விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி கீழக்கரந்தையை சேர்ந்த கருப்பசாமி மகன் கண்ணன் (22) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.







