டெல்லியில் போராட்டம்: ஆகாஷ்வானி பவனுக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி , பிரியங்கா மீது வழக்குப்பதிவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் வாக்குகள் திருடப்பட்டதாக தேர்தல் கமிஷன் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தது. இந்தநிலையில் தேர்தல் கமிஷனின் 2 கமிஷனர்கள், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனைத்தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை. எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே, டெல்லியில் நேற்று இந்திய தேர்தல் கமிஷன் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை அகில இந்திய வானொலி நிலையம், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி ஆயோக் சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்த பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியை முன்னிட்டு அந்த பகுதியில் பல இடங்களிலும் தடுப்புகள் அமைத்து போலீசார், அதிவிரைவுப்படையினர் உள்ளிட்ட காவல் படையினர் நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் எம்.பி.க்களை மேற்கூறிய சந்திப்பில் தடுத்து நிறுத்தி, மேலும் முன்னேற விடாமல் தடுத்தனர். இதனால் ராகுல்காந்தி தடுப்பு வேலியில் ஏறினார்.
கூடவே, பிரியங்கா காந்தியும் ஏறினார். ஆனால் மறுபக்கம் போலீஸ்படை திரளாக இருந்ததால் அவர்களால் முன்னேற முடியவில்லை. ராகுல் காந்தி, இரும்பு தடுப்பு வேலியில் நின்றபடியே, தேசியக்கொடியை ஏந்தி, போராட்டத்துக்கு ஊக்கம் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து அவர், அருகில் உள்ள வானொலி நிலைய வளாகத்துக்குள் நுழைந்தார். அங்கிருந்து தேர்தல் கமிஷன் அலுவலகம் சென்று விடலாம் என்பது அவரது திட்டமாக இருந்துள்ளது. ஆனால் போலீசார் அதனையும் முறியடித்தனர்.

இதனால் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் அங்கே ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, போலீசார் தடை ஏற்படுத்திய இடத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பிற எம்.பி.க்களை போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றி, அங்கிருந்து வெளியே கொண்டு சென்றனர். அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் முன்னதாகவே கைது செய்யப்பட்டு இருந்தனர். பிரியங்கா காந்தியும் முன்னதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
போராட்டம் நடைபெற்ற பகுதியில் ஏற்கனவே 163 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டு இருந்ததை போலீசார் ஒலிபெருக்கியில் அறிவித்தனர். எனவே அங்கு கூடியிருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர். அவர்கள் கேட்காததால் அவர்களும் கைது ஆனார்கள்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க, போலீசார் மற்றும் உள்துறை அதிகாரிகள் அவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தலைமை தேர்தல் கமிஷனரை சந்திக்காமல், இடத்தைவிட்டு அகலப்போவது இல்லை என அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் போராட்டம் இரவு 7.30 மணிக்கு மேலும் நீடித்தது.
இந்தநிலையில் டெல்லி போலீஸ் துணை கமிஷனர் சச்சின் சர்மா தலைமையில் இரவு 8 மணி அளவில் அங்கு கூடுதல் போலீசார் வந்தனர்.ராகுல்காந்தி உள்ளிட்டோருடன் துணை கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறி. போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது முரண்டு பிடித்த எம்.பி.க்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டனர்.

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்ட பின்னர், போலீசாரிடம் பேசி கீழே இறங்கினார். மற்றவர்கள் அங்கிருந்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த போராட்டம் டெல்லியை நேற்று மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கியது. காலை 11 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 9 மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் அனுமதியின்றி ஆகாஷ்வானி பவனுக்குள் நுழைந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.







