3விஞ்ஞானிகளுக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2026-ம் ஆண்டுக்கான நோபல் பரிசை அறிவிக்கும் நிகழ்வு இன்று தொடங்கியுள்ளது. 50 உறுப்பினர்களை கொண்ட நோபல் அமைப்பானது, பரிசுக்கு முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அறிவிக்கும்.
வாழ்க்கை அறிவியல் அல்லது மருத்துவ துறையில் அரும்பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த பரிசு வழங்கப்படுகிறது.
இதன்படி, முதலில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது., சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா மையத்தில் நோபல் பரிசுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கார்ல் டீஸ்செரோத், பீட்டர் ஹெகமன் மற்றும் ஜார்ஜ் நாகல் ஆகிய 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, அயனிகளின் செயல்பாடுகள் மற்றும் ஒளியியல் மரபணுவியல் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் கார்ல் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர். மற்ற இருவரும் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இதனை நோபல் பரிசுக்கான அமைப்பின் மருத்துவ குழுவுக்கான செயலாளர் தாமஸ் பெர்ல்மேன் அறிவித்துள்ளார்.
நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசும், நாளை மறுநாள் வேதியியலுக்கான நோபல் பரிசும், 8-ந்தேதி இலக்கியத்துக்கான நோபல் பரிசும், 9-ந்தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 12-ந்தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளன.







