மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப சாவு
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மகன் மணிகண்டன் (வயது 11). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மணிகண்டன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பக்கம் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக, வீட்டின் முன் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த எர்த் பைப்பை மணிகண்டன் தொட்டார். அதில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்து மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.







