தூத்துக்குடி நகைக்கடை அதிபரிடம் ரூ. 10.30 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை நடவடிக்கை
தூத்துக்குடியில் நகைக்கடை நடத்தி வரும் சச்சின் (வயது 42) , உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் பணத்தை கடத்தி செல்வதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

வருமான வரித்துறை துணை இயக்குநர் ஜெகீஷ் அளித்த தகவலின் பேரில், எலெக்ட்ரானிக் சிட்டி மண்டல துணை போலீஸ் கமிஷனர் நாராயண் வழிகாட்டலில், எலெக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள ஓசூர் மெயின் ரோடு, வீரசந்திரா சிக்னல் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் குறிப்பிட்ட காரை காவல்துறையினர் வழிமறித்து சோதனையிட்டனர்.
காரில் இருந்த 2 பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ. 9 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், காரில் வந்த சச்சின் உட்பட 2 பேரையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, தூத்துக்குடியில் உள்ள சச்சினின் வீட்டில் தமிழக வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது வீட்டில் இருந்து ரூ. 1.30 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. வருமான வரித்துறை சோதனையிலிருந்து தப்பிப்பதற்காகவே சச்சின் பல கோடி ரூபாய் பணத்துடன் காரில் பெங்களூரு நோக்கித் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், கார் மற்றும் பிடிபட்ட சச்சின் உள்ளிட்ட 2 பேரையும் எலெக்ட்ரானிக் சிட்டி காவல்துறையினர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.







