தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்துக்கு உப்பள நிலங்களை கையகப்படுத்த கூடாது ; அமைச்சரிடம் உப்பு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடி கடற்கரையை ஒட்டியுள்ள முள்ளக்காடு பகுதியில் அமைந்திருக்கும் கோவளம், பசுவந்தனை, தன்பாடு ஆகிய சிறிய அளவு உப்பள நிலங்களை, புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக நில கையகப்படுத்தல் செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதற்கு எதிராகவும், தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் இணைந்து பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் தொடர்ச்சியாக, தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு சென்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளருமான ஆனந்தை நேரில் சந்தித்து உப்பள நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தவிர்க்க வலியுறுத்தி, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ஆனந்த், இக்கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் நேரில் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின் போது உப்பு உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் சேகர், நிர்வாகிகள் பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், பாலசுப்பிரமணியன் மற்றும் சங்கத்தின் பிற முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.







