நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 2-வது நாளாக தீயணைப்பு பணி
திருநெல்வேலி அருகே வடுகம்பட்டியில் உள்ள தனியார் காகித ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காகித பண்டல்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், இன்று 2-வது நாளாகத் தீயணைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காகித ஆலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மதியம் சுட்டெரித்த வெயில் மற்றும் பலத்த காற்று காரணமாக, ஆலையின் ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய காகித பண்டல்களில் திடீரெனத் தீப்பற்றி, நாலாபுறமும் மளமளவெனப் பரவியது.
தகவலறிந்த மாவட்டத் தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா தலைமையில் பேட்டை, நெல்லை, டவுன் மற்றும் சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நேற்றிரவு முழுவதும் தீவிரமாகத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால், இன்று 2-வது நாளாக தீயணைப்புப் பணிகள் தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் சுமார் 25,000 டன் பழைய காகித பண்டல்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
விபத்து ஏற்பட்ட மதிய நேரத்தில் தொழிலாளர்கள் உணவு அருந்த சென்றிருந்ததால், நல்வாய்ப்பாகப் உயிர்ச்சேதம் மற்றும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. சீதபற்பநல்லூர் காவல்துறையினர் மற்றும் நெல்லை தாசில்தார் மாரிமுத்து குமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

வானுயர எழும்பிய கரும்புகை நெல்லை மற்றும் சேரன்மாதேவி வரை தென்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







