போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அறைந்ததாக கைதான இளைஞர் விடுதலை
தஞ்சையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் மாநாட்டு விளம்பர பேனரை மாநகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி அகற்றியது. இதனைக் கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்ற இளைஞர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் வழிவிடுமாறு வாக்குவாதம் செய்தார்.

இளைஞருக்கும் கட்சியினருக்கும் இடையே மோதல் உருவாகாமல் தடுக்க பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் தலையிட்டார். அப்போது ஆகாஷ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம் அவரை கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு ஆகாஷும் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீமை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் நடத்துதல், காயம் ஏற்படுத்துதல் உட்பட 7 சட்டப் பிரிவுகளின் கீழ் (BNS) ஆகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் 38 பேர் மீதும் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
போலீசார் முதலில் இளைஞரைத் தாக்கியதற்கு பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது: இளைஞர் ஆகாஷ் போலீசாரை தொடர்ந்து ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசியதால், நிலைமையைக் கட்டுப்படுத்தவே குறைந்தபட்ச பலப் பிரயோகம் பயன்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் ஆகாஷ், ஒருநாள் நீதிமன்றக் காவலுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.







