காட்டு பன்றிகளை பிடிக்க கூண்டுகள் தயார் செய்ய ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவு
Oplus_16908288
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வந்து பங்கேற்ற விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்கள் குறைகளை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து ஆட்சியர் பேசுகையில் கூறியதாவது:-

“விவசாயிகளின் நிலங்களிலேயே கூண்டுகள் வைத்து காட்டு பன்றிகளைப் பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிடிபடும் பன்றிகளை வனத்துறை மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 45 நாட்களுக்குள் கூண்டுகள் தயார் செய்யப்பட்டு, மாவட்டத்தின் 10 வட்டாரங்களுக்கும் வழங்கப்படும்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, முதற்கட்டமாக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சிறு பாசனக் குளம் / கண்மாய்களில் உள்ள கருவேலமரங்களை அகற்றி, தண்ணீர் தேங்கும் திறனை உயர்த்த 1,000 ஏக்கருக்கு இந்த வாரத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வுள்ளது.
மரத்தின் விட்டம் 5 இன்ச்க்கு மேல் இருந்தால் 1 டன் ரூ.4,000, 5 இன்ச்க்கு கீழ் இருந்தால் 1 டன் ரூ. 1,000 அரசுக்குச் செலுத்த ஒப்பந்தம் கோரப்படும்.
வைப்பார் ஆற்றுப்படுகையில் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், கருவேலமரங்களை கொண்டு பொருட்கள் தயாரிக்கும் 2 தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

மேலும் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 249 கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) in பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இணை இயக்குநர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் தங்கராஜன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.







