திமுகவில் அதிரடி மாற்றங்கள்: மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 110 ஆக உயருகிறது -70 வயதுக்கு மேல் பதவி கிடையாது
திமுகவில் மாவட்டக் கழகங்கள் 110-ஆக அதிகரிப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளராக ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், திமுகவின் 16-வது அமைப்புத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிர்வாக கட்டமைப்பை மறுசீரமைக்கும் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு :-
கிளைக் கழகச் செயலாளர்:
வயது வரம்பு அதிகபட்சமாக 45 வயது என நிர்ணயிக்கப்படுகிறது.
பதவிக் காலம்: ஒருவர் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே அப்பொறுப்பில் நீடிக்க முடியும்.
மாநகரக் கிளைகள் உருவாக்கம்:
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் வட்டக் கழகங்களுக்கு கீழ் ‘கிளைக் கழகம்’ என்ற புதிய பிரிவு உருவாக்கப்படுகிறது.
இதன் செயலாளருக்கும் அதிகபட்ச வயது வரம்பு 45 மற்றும் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும்.
வட்டக் கழகங்கள் சீரமைப்பு:
சென்னை மாநகராட்சியில் சராசரியாக 10,000 வாக்காளர்களுக்கும், பிற மாநகரங்களில் 5,000 வாக்காளர்களுக்கும் ஒரு வட்டக் கழகம் அமைக்கப்படும்.
வட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகும் (அதிகபட்சம் 2 முறை).
பேரூர்க் கழகச் செயலாளர்:
பேரூர்க் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு 60 ஆக நிர்ணயிக்கப்படுகிறது (அதிகபட்சம் 2 முறை).
பகுதிக் கழகங்கள் சீரமைப்பு:
சென்னையில் 40,000 வாக்காளர்களுக்கும், பிற மாநகரங்களில் 30,000 வாக்காளர்களுக்கும் ஒரு பகுதிக் கழகம் உருவாக்கப்படும்.
பகுதிச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 ஆகும் (அதிகபட்சம் 2 முறை).
நகரக் கழகங்கள் சீரமைப்பு:
சராசரியாக 40,000 வாக்காளர்களை உள்ளடக்கி ஒரு நகரக் கழகம் அமைக்கப்படும்.
நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 (அதிகபட்சம் 2 முறை).
ஒன்றியக் கழகங்கள் சீரமைப்பு:
சராசரியாக 30,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்படும்.
எந்தவொரு ஊராட்சியும் இரண்டாக பிரிக்கப்படக் கூடாது; ஒரு ஒன்றியம் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் மட்டுமே அமைய வேண்டும்.
ஒன்றியச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 (அதிகபட்சம் 2 முறை).

மாவட்டக் கழகங்கள் 110-ஆக அதிகரிப்பு:
வருவாய் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் மறுசீரமைக்கப்படும்.
இதன்படி தற்போதிருக்கும் 77 கழக மாவட்டங்கள் 110-ஆக அதிகரிக்கப்படும். இதனால் ‘மாநகரச் செயலாளர்’ பொறுப்பு இனி தேவையில்லை எனக் கருதப்படுக்கிறது.
மாவட்ட செயலாளரின் அதிகபட்ச வயது வரம்பு 70 என நிர்ணயிக்கப்படுவதுடன், ஒருவர் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும்.
அமைப்புகளை உருவாக்கும் காலவரையறை:
புதிய 110 கழக மாவட்டங்களை திமுக தலைவர் அறிவித்த பிறகு, 15 நாட்களுக்குள் அனைத்துக் கீழ்நிலை அமைப்புகளும் உருவாக்கப்பட்டு தலைமைக் கழகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







