கோவில்பட்டியில் சாலையோர திடீர் உணவகங்களில் அதிரடி சோதனை

கோவில்பட்டி நகரில் கடலையூர் ரோடு, பசுவந்தனை ரோடு எட்டையாபுரம் சாலை, புது ரோடு, பஸ் நிலையம் அருகே உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர திடீர் உணவு கடைகள் அதிக அளவில் உருவாகி வருகின்றன.
இங்கு விதவிதமான உடனடி உணவு பொருட்கள் , எண்ணெய் பலகாரங்கள் விற்பனை அமோகமாக நடக்கின்றன, இந்த கடைகளுக்கு சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன, இதை பார்த்து வியாபாரம் சூடு பிடிக்கிறது.

அதே சமயம் அங்கு தரமான பொருட்கள் கிடைக்கிறதா என்பது பற்றி கோவில்பட்டி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் குறித்தும், உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். சில கடைகளில் அதிக நிறமிகள், ஏற்கனவே பயன்படுத்திய கழிவு எண்ணெய் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து 6 கடைகளுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்தனர். 4 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த் சோதனையின் போது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 10 லிட்டர் கழிவு எண்ணெய், அதிக நிறமிகள் கொண்ட இறைச்சிகள், காளான் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கடைக்காரர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.







