தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் , அண்ணா பிறந்தநாளில் தொடக்கம்
தமிழக அரசின் ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதில் மிக முக்கியமான திட்டமான “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை” நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், தாய்மையின் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் வழிவகை செய்யும்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்குத் தலா ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும்.
கடந்த 22 -6- 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் தொய்வின்றிச் செயல்படுத்துவதற்காகத் தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. திட்டத்திற்கான தங்க மோதிரப் கொள்முதல் ஒப்பந்தப் புள்ளிகளை (டெண்டர்) உடனடியாகக் கோருவதற்குக் கல்வி மற்றும் நிர்வாகத் தரப்பிற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 15, 2026 அன்று முதலமைச்சரால் இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது.







