டாக்டர் ராமதாசுடன் அன்புமணி- சௌமியா சந்திப்பு
Oplus_16908288
பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த ஒன்றரை வருடங்களாக எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வந்த நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. சட்டமன்றத் தேர்தலில் கூட இருவரும் தனித்தனி அணிகளாகப் பிரிந்தே செயல்பட்டனர்.

அன்புமணி அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரிக்க, ராமதாஸோ சசிகலாவுடன் கைகோர்த்தார். இதனால் கட்சிச் சின்னம் அன்புமணியின் கட்டுப்பாட்டுக்குச் சென்றதுடன், பாமக தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பமும் அதிருப்தியும் நிலவியது. பரஸ்பரக் குற்றச்சாட்டுகளால் பாமகவில் ஏற்பட்ட பிளவு, தேர்தல் முடிவுகள் வரை நீடித்தது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்த மோதலின் போக்கை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன. அன்புமணி தலைமையிலான அணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்த வேளையில், ராமதாஸ் தரப்பு கடுமையான தோல்வியைச் சந்தித்தது.
இதன் காரணமாக ராமதாஸ் அணியில் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் அன்புமணி பக்கமாகத் தாவத் தொடங்கினர். இந்நிலையில், ராமதாஸ்-சரஸ்வதி தம்பதியரின் 61-வது திருமண நாளை முன்னிட்டு, அன்புமணி தனது மனைவி சௌமியா மற்றும் மகள்களுடன் தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று ராமதாஸைச் சந்தித்தார்.

அங்கு அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அன்புமணியைக் கட்டிப்பிடித்து ராமதாஸ் ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.
இந்த உணர்ச்சிமயமான சந்திப்பின் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகளும் இருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







