திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டணத்தை உயர்த்தக்கூடாது; சற்குரு சீனிவாச சித்தர் எதிர்ப்பு
Oplus_16908288
திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் மற்றும் அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளுக்குரிய கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவதற்கு கோவில் நிர்வாகம் முன்வந்து அறிவித்துள்ளது.
இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு சித்தர் நகர் மஹாபிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘சற்குரு சீனிவாச சித்தர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
கடற்கரையோரம் அமைந்துள்ள இக்கோவிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆன்மிக சிறப்புபெற்ற இக்கோவிலில் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வதில் பல்வேறு வகையான முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.
இதனை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி திடீரென நேரில் வந்து ஆய்வு செய்து அங்கு நடைபெற்று வந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது போற்றுதலுக்குரியதாகும்.
இப்படிப்பட்டச்சூழ்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் அபிஷேக தரிசன கட்டணம், தங்கரத உலா திட்டம், சண்முகார்ச்சனை, மூலவர் அபிஷேகம், சந்தனக்காப்பு மற்றும் ஒன்பதுகால பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுக்குரிய கட்டணத்தை பல மடங்கு உயர்த்திட உத்தேசித்துள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இதுதொடர்பான அறிவிப்பானது கோவில் நிர்வாகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளதுடன், இதுகுறித்து ஆன்மிக அன்பர்கள், பக்தர்கள் தங்களின் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்றும் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் இந்த திடீர் கட்டண உயர்வானது பக்தர்களை வெகுவாக பாதிக்கும்.
இந்த திடீர் கட்டண உயர்வு அறிவிப்பானது பக்தர்களை மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இது அமலுக்கு வந்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தாலும் ஆச்சரியம் இல்லை தான்.
கோவில்களை பொறுத்தவரை ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அனைத்து பக்தர்களும் சமம் என்ற ரீதியில் வழிபடுவதற்கான ஏற்பாடுகளை தான் கோவில் நிர்வாகம் செய்திடவேண்டும்.
அதைவிடுத்து வசூல் நோக்கத்தில் இதுபோன்ற முடிவினை எடுப்பது என்பது ஒருபோதும் ஏற்புடையதல்ல. மனஅமைதிக்காவும், தங்களின் இன்னல்கள் தீரவும் இறைவனை வழிபட வரும் பக்தர்களிடத்தில் இவ்வளவு கட்டணம் தந்து தான் வழிபடவேண்டும் என்று சொல்வதில் நியாயமில்லை.
எனவே, தமிழகத்தில் சிறப்பான ஆட்சி மேற்கொண்டு வரும் தமிழக வெற்றிக்கழக தலைவரான தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இதனை கவனத்தில்கொண்டு இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறுவதற்கு வழிவகை செய்திடவேண்டும்.
அதோடு, தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் இறைவனை எளிதில் தரிசிக்க தகுந்த ஏற்பாடுகளை செய்திடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, தங்குமிடம், பார்க்கிங் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாக செய்துகொடுத்திடவேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.







