கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து; பெண் உள்பட 2 பேர் பலி
கோவில்பட்டி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் உள்ள காட்டுகோவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது….
நேற்று இரவு அந்த கட்டிடத்தில் சிலர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு கட்டிடம் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது.

இந்த விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த புளியங்குளத்தை சேர்ந்த அய்யப்பன்(வயது 30), விருதுநகர் மாவட்டம் புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த மாலதி ஆகியோர் கட்டிட… இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சூர்யபிரகாஷ்(25) என்பவர் படுகாயம் அடைந்தார்….
இந்த வெடிவிபத்து சம்பவம் இரவு 9.30 மணி அளவில் நடந்தது. வெடி சத்தம் 10 கிலோ மீட்டர் தூர சுற்றுப்புற பகுதி வரை கேட்டது. கோவில்பட்டி நகர் மற்றும் அப்பனேரி பகுதியில் தெளிவாக கேட்டது, ஆனால் வெடி விபத்து என்று கணிக்க முடியவில்லை.
தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரின் உடல்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்த சூரிய பிரகாசுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே , சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி மாரீஸ்வரி (30), கட்டிட உரிமையாளர் குருநாதன் (65) ஆகிய 3 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்., இவர்களில் , மாரீஸ்வரி மற்றும் குருநாதன் ஆகிய 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







