பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பு கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடநத்தம் கிராமத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட முனியசாமி என்பவரின் மகன் தர்மமுனீஸ்வரன் என்ற “மாவீரன்” (38 )என்பவருக்கு இன்று (25.05.2026) தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.I

இச்சம்பவம் தொடர்பாக, குளத்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 118/26-ன் கீழ், “பெண் காணவில்லை” என்ற பிரிவின் கீழ் (103(1), 104, 127(2), BNS) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 5(1),5(h), 5(j)(iv), 5(t) மற்றும் 6 of போக்சோ ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. துப்பு துலங்காத இவ்வழக்கில் சிறுமியின் மரணம் மற்றும் அது நிகழ்ந்த சூழல் குறித்து தொடக்கத்தில் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை.
காவல்துறை கூடுதல் தலைவர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தூத்துக்குடியிலேயே முகாமிட்டு பல நாட்கள் விசாரணை பணிகளை மேற்பார்வையிட்டனர். மேலும் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை பிடிக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தீவிரமான மற்றும் நுணுக்கமான புலனாய்வுப் பணிகளின் விளைவாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு முக்கியத் தடயம் கிடைத்தது. அதன் அடிப்படையில், ஒரு இருசக்கர வாகனம் முக்கியச் சந்தேகத்திற்குரியதாக அடையாளம் காணப்பட்டது.
இதுவே குற்றவாளியைக் கைது செய்ய வழிவகுத்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் கிடைத்த உறுதியான ஆதாரங்கள், குற்றச் சம்பவத்தில் குற்றவாளியின் நேரடித் தொடர்பை உறுதிப்படுத்தின.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரியான விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் மிகத் துல்லியமாகவும் துரிதமாகவும் விசாரணையை முன்னெடுத்துச் சென்றார். விரிவான விசாரணைக்குப் பிறகு 21 நாட்களிலேயே குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் வழக்கின் விசாரணை நடைமுறைகள் 54 நாட்களிலேயே நிறைவுற்றன. இதன் விளைவாகவே இத்தகைய சிறப்பான தீர்ப்பு எட்டப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நமது குற்றவியல் நீதி அமைப்பின் மீது மக்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றங்களிலும் இத்தண்டனை உறுதி செய்யப்படுவதையும், குற்றவாளிக்கான தண்டனை மிக விரைவாக நிறைவேற்றப்படுவதையும் உறுதி செய்யும் வகையில், மேல்முறையீட்டு நடைமுறைகளைத் தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை உறுதியுடன் உள்ளது.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது







