கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி பட்டமளிப்பு விழா
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு(ஜி.வி.என்.) கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை கல்லூரியின் என். தாமோதரன் நினைவு கலையரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரிச் செயலர், கல்லூரி முதல்வர், இயக்குநர், சிறப்பு விருந்தினர் மற்றும் துறைத் தலைவர்கள் பட்டமளிப்பு விழா அங்கியுடன் பாரம்பரிய மரபுடன் விழா மேடையில் அமர்ந்த பின்பு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது,. கல்லூரிச் செயலர் ப. மகேந்திரன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார்.. கல்லூரியின் முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக, திருநெல்வேலி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பா.விக்டோரியா தங்கம் கலந்து கொண்டார். அவரை அரசு உதவி பெறும் கல்லூரியின் கணிதவியல் துறை, இணைப் பேராசிரியர் அ.பாண்டியராணி அறிமுகம் செய்து வைத்தார்.
சிறப்பு விருந்தினர் விக்டோரியா தங்கம் பேசுகையில்,” இக்கல்லூரி பல பிரபலமான தலைவர்களை உருவாக்கியிருக்கிறது. பட்டம் பெறும் மாணவர்கள் ஆர்வம், கடின உழைப்பு, நன்றியுணர்ச்சி. பணிவு, உற்சாகம் ஆகிய விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டும்” என்று எடுத்துரைத்தார்.
பின்னர் அவர் மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கினார். முதல்வர் மூ.சுப்புலெட்சுமி உறுதி மொழியைப் படிக்க, பட்டம் பெற்றவர்கள் திரும்ப சொல்லி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இவ்விழாவில் 560 இளங்கலை மற்றும் முதுகலை, மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 16 துறைகளில் இருந்து பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
நேரில் வந்து பட்டம் பெறாதவர்கள் பற்றிய விபரத்தினை இயற்பியல் துறைப் பேராசிரியரும் பட்டமளிப்பு விழாக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கி.ரேணுகாதேவி அவர்கள் அறிவித்தார். நேரில் வந்து பட்டம் பெறாதவர்களுக்கு அஞ்சல் வழியாக 43 பட்டச் சான்றுகள் அனுப்பப்பட்டன.

இவ்விழாவில் கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், மாணவர்கள் அவர்தம் பெற்றோர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளைச் விழாக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கி.ரேணுகாதேவி, இணை ஒருங்கிணைப்பாளர் ச.காந்திமதி மற்றும் கல்லூரி ஆசிரிய, அலுவலர்கள் செய்திருந்தனர்.







