திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய், சாமி தரிசனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், இன்று காலை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதற்கயாக விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து இன்று அதிகாலை சாலை மார்க்கமாகப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைந்தார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். திரிசுதந்திரர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வேலுடன் விஸ்வரூப தரிசனம் செய்த விஜய், கடலில் இறங்கி மலர்கள் சாற்றி முருகனை வழிபட்டார்.
விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அவரைக் காண மக்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.
கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும் திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது..

தேர்தல் முடிவுகள் சாதகமான அமைய வேண்டி, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது. விஜய் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் செய்த இந்த யாகத்தில் விஜய்க்கு நெருக்கமான சிலர் மட்டும் பங்கேற்றதாக கூறப்பட்டது.
திருச்செந்தூர் கோவில் சாமிதரிசனத்துக்கு பிறகு சாலை மார்க்கமாக மதுரை சென்ற விஜய் , அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.







