அரிவாளால் தாக்கி பேராசிரியையிடம் 14 பவுன் நகை கொள்ளை; நெல்லையில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
நெல்லை கீழமுன்னீர்பள்ளம் வி.ஜி.பி. டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனித்தா (வயது 45). இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 18-ஆம் தேதி இரவு, இவர் தனது வீட்டின் குப்பைகளைக் கொட்டுவதற்காகக் கதவைத் திறந்து வெளியே சென்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்த முகமூடி அணிந்த 4 பேர் திடீரென ஜெனித்தாவின் வாயைப் பொத்தி வீட்டிற்குள் இழுத்துச் சென்றனர். அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தைக் கேட்டு மிரட்டிய அந்தக் கும்பல், அவர் மறுக்கவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைத் தாக்கினர்.

தாக்குதலால் காயமடைந்ததும், உயிருக்கு அஞ்சிய ஜெனித்தா தான் அணிந்திருந்த மற்றும் வீட்டில் வைத்திருந்த நெக்லஸ், தங்கச் சங்கிலி, கம்மல் உள்ளிட்ட 14 பவுன் நகைகளைக் கொள்ளையர்களிடம் ஒப்படைத்தார்.
நகைகளைப் பெற்றுக்கொண்ட முகமூடி கொள்ளையர்கள் , தாங்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர்,. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ₹13 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீரவநல்லூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்வது தெரியவந்தது.

அவரைப் பிடிக்க முயன்றபோது, அவர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி ஒரு போலீஸ்காரர் மீது மோதிவிட்டுத் தப்பினார். இதில் காயமடைந்த போலீஸ்காரர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







