முதல் நாளில் 251 வேட்பு மனுக்கள் தாக்கல்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது இதையொட்டி வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது.

அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது,.வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் 3 வாகனங்களில் தேர்தல் விதி முறைகளுக்கு உட்பட்டு வர வேண்டும். அந்த வாகனங்களை தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் நிறுத்திவிட வேண்டும். பின்னர் வேட்பாளர் மற்றும் அவருடன் 3 பேர் மட்டும் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 251 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,
வேட்பு மனு தாக்கலுக்கு 8 நாட்கள் அவகாசம் இருந்தாலும் அவற்றில் 4 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் மற்ற நான்கு நாட்களில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.
அதேபோல் வேட்பாளர்கள் வேட்பு மனுவை இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமும் சமர்ப்பிக்கலாம். ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கலின் போது நேரில் ஒப்படைக்க வேண்டும். வேட்பாளர்கள், வேட்பு மனுவில் பெயர் உள்பட அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் வைக்கப்படும் ‘பேலட் ஷீட்டில், வேட்பாளரின் கலர் போட்டோ சேர்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் தேதியிலிருந்து 3 மாதத்துக்குள் எடுக்கப்பட்ட வேட்பாளரின் போட்டோவையே, வேட்பு மனுவில் இணைக்க வேண்டும்.வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் நிறைவு நாளான வருகிற 6-ந்தேதி மாலை 3 மணிக்குள் உறுதிமொழிபத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்புமனுக்கள் பரிசீலனை 7-ந்தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9-ந்தேதி கடைசி நாளாகும்.அன்றைய தினம் ,மாலை ஒவ்வொரு தொகுதியிலும் இறுதி வேடபாளர் பட்டியல் வெளியாகும்.







