கோவில்பட்டியில் கிராம உதவியாளர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் 2-வது நாளாக கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கு 4-ம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் (டி-கிரேடு) வழங்க வேண்டுமென வலியுறுத்தி கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் தொடங்கியது.

இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்க மாநில செயலாளர்கள் மாரியப்பன், தங்கப்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில முன்னாள் பொருளாளர் கந்தசாமி, மாநில முன்னாள் செயலாளர் வேலுச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் துணைத் தலைவர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
மாவட்ட தலைவர் செல்லப்பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்புராஜ் மற்றும் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கிராம உதவியாளர்கள், போராட்டத்தில் கலந்து கொண்டனர்.







