கும்பாபிஷேக விழா: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வேத யாகம்


பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோவிலில் மகா கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடத்த அறங்காவலர் குழுவினரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் அனுமதி பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்.30-ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, திருக்கோயில் நிதி ரூ.6.40 லட்சத்தில் பளிங்கு கற்கள் அகற்றப்பட்டு, கருங்கற்களில் நீர் பாய்ச்சி சுத்தம் செய்தல், உபயதாரர் நிதி ரூ.25.50 லட்சத்தில் சுவாமி, அம்மன் சன்னதிகளில் தளம் அமைத்தல், உபயதாரர் நிதி ரூ.52 லட்சத்தில் ராஜகோபுரம் மற்றும் சன்னதி விமானங்களில் பஞ்சவர்ணம் பூசுதல் ஆகிய பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன,.

இந்த நிலையில், ஜனவரி .25-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 25-ம் தேதி கோயில் முன்புள்ள மைதானத்தில் யாகசாலை பந்தல் அமைக்கும் பணிக்கான கால்நாட்டு விழா நடந்தது. தொடர்ந்து, பந்தல் அமைக்கப்பட்டது. இதற்காக கோவிலின் இடதுபுறம், முன்புறம் என 2 யாகசாலை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மொத்தம் 42 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, நேற்று (20-ம் தேதி) காலை கும்பாபிஷேக விழா தொடங்கியது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று 21-ம் தேதி காலையில் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை. புன்யாஹவாசனம். திசா ஹோமம், சாந்தி ஹோமம் சுவாசினி பூ சுமங்கலி பூஜை,அஸ்வ பூஜை நடைபெற்றது.
திசா ஹோமம் என்பது திசைகளைக் குறித்தும், எதிரிகளை வெல்லவும், செல்வத்தைப் பெருக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் செய்யப்படும் ஒரு சக்திவாய்ந்த வேத யாகமாகும்; இதில் பத்து சக்தி தெய்வங்களின் அருளைப் பெற மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு, நெருப்பு வளர்க்கப்படுகிறது

சாந்தி ஹோமம் என்பது வாழ்வில் அமைதி, நல்லிணக்கம், ஆரோக்கியம், செல்வம், நீண்ட ஆயுள் மற்றும் துன்பங்கள் நீங்க செய்யப்படும் ஒரு புனித யாகம்;ஆகும்/ இந்த யாக பூஜைகளில் பக்தர்கள பலர் கலந்து கொண்டனர்,
மாலை 5 மணிக்கு மேல் ம்ருத்ஸ்ங்கரணம், அங்குரார்பணம், பாலிகாஸ்தாபனம், சோமகும்ப பூஜை, பேரீதாடனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகியவை நடக்கின்றன.
நாளை 22-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறுகின்றன. 23-ம் தேதி காலை 8: மணிக்கு மேல் 2-ம் கால யாகசாலை பூஜை, அன்று மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜை, 24-ம் தேதி காலை 4-ம் கால யாகசாலை பூஜை, அன்று மாலையில் 5-ம் கால யாகசாலை பூஜை நடக்கின்றன.

25-ம் தேதி அதிகாலை 3மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது, அதன் பின்னர், அதிகாலை 4:30 மணிக்கு கடங்கள் யாகசாலையில் இருந்து கோயிலுக்கு புறப்படுதல், 5:00 மணிக்கு மேல் ராஜகோபுரம், சாலை கோபுரம், விமானங்கள், அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறுகின்றன.
காலை 11 மணிக்கு மூலவர் சுவாமி, அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கின்றன. மாலை 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடக்கின்றது.







