கோவில்பட்டியில் பள்ளி வேன் மீது மோதிய மினி பஸ் ;4 மாணவர்கள் காயம்
Oplus_16908288
கோவில்பட்டியில் உள்ள நாடார் நடுநிலைபள்ளிக்கூட வாகனம் பள்ளி முடிந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சில மாணவர்களை இறங்கி விட்டு, பெட்ரோல் பங்க் வழியாக பள்ளி வாகனம் மெயின் சாலைக்கு வந்தது. அப்போது கூசாலிபட்டியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்ற தனியார் மினிபஸ் பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் பள்ளி வாகனத்தின் கண்ணாடி உடைந்து வாகனத்தில் இருந்த 4 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி நகரில் மினி பஸ்கள் மிக வேகமாக செல்வதாகவும், பஸ் நிறுத்தம் தவிர திடீர் திடீரென பல்வேறு இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்வதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.







