தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 190 பேர் கைது
பழைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசுப் பணியிடங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பாமல், படித்த இளைஞர்களைக் கொண்டு நிரந்தர ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மைக்கேல் லில்லிபுஷ்பம் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஓய்வூதியர் சங்கம், கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், வேளாண்மை துறை, சத்துணவுத்துறை, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
மேலும், அரசு ஊழியர் சங்கத்திலிருந்து மறியல் செய்வதற்காக அரசு ஊழியர்கள் பாளையங்கோட்டை ரோடு அம்பேத்கர் சிலை முன்பு நடந்து சென்ற போது அவர்களை மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 115 பெண்கள் உட்பட 190 பேர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.







