ஆசிரியை கொலை வழக்கில் சரண் அடைந்தவர், சிறையில் தற்கொலை முயற்சி
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் அருகே உள்ள மேல களக்குடி என்ற ஊரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் காவியா(வயது 26), எம்.ஏ., பி.எட். படித்துள்ளார்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி வந்த காவியா தற்போது ஆலங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். தினமும் இவர் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம்.

அதே ஊரை சேர்ந்தவர் கருணாநிதி என்பவரின் மகன் அஜித்குமார் (29). பெயிண்டரான அஜித்குமாரும், காவியாவும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். காவ்யா, அஜித்குமாரை காதலித்து வந்தது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் காவ்யாவை அவரது பெற்றோர், தங்களது உறவினருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி உறவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 23-ந்தேதி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.இந்த விவரத்தை காவியா தனது காதலன் அஜித்குமாருக்கு தெரிவிக்காமல் அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் இரவு 8 மணிக்கு காவியாவும், அவரது காதலன் அஜித்குமாரும் செல்போனில் வீடியோ காலில் பேசினர்.அப்போது அஜித்குமாரிடம், நமது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனக்கு எனது உறவினருடன் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது என காவியா தெரிவித்துள்ளார். அத்துடன் நிச்சயதார்த்த போட்டோக்களையும் அஜித்குமாருக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளார்.
அதைக்கேட்டதும் அஜித்குமார் அதிர்ச்சியில் உறைந்தார். இத்தனை ஆண்டுகள் காதலித்தவருக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்ததை எண்ணி ஆத்திரம் அடைந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலை காவியா வழக்கம்போல் பள்ளிக்கு தனது ஸ்கூட்டரில் சென்றார். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே சென்றபோது காவியாவின் ஸ்கூட்டரை அஜித்குமார் வழிமறித்தார்.

பின்னர் உனக்கு உறவினருடன் நிச்சயதார்த்தம் ஆனதை ஏன் என்னிடம் சொல்லவில்லை எனக்கேட்டு காவியாவிடம், அஜித்குமார் தகராறு செய்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் அஜித்குமார், “எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது” எனக்கூறியபடி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவின் தலையில் சரமாரியாக குத்தினார்..
இதில் படுகாயம் அடைந்த காவியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார்.பின்னர் அஜித்குமார் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.
இதை தொடர்ந்து அஜித்குமார் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே காவ்யா உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த் நிலையில் புதுக்கோட்டை சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த அஜித்குமார் ,திடீரென தூக்கு போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை சிறைத்துறை காவலர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.







