கோவில்பட்டியில் முதலமைச்சர் திறந்து வைக்கும் திமுக கட்சி அலுவலகம்; அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்


கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் 3 சென்ட் நிலத்தில் திமுக நகர கழகத்திற்கு புதிதாக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
தரைத்தளம் மற்றும் இரண்டு ,மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் முகப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகத்தின் ஒரு பகுதியில் நூலகமும் இடம்பெற்றுள்ளது.
வரும் 28ந்தேதி மாலையில், தென்காசி செல்லும் வழியில் கோவில்பட்டிக்கு வருகை தரும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, கருணாநிதி உருவசிலையை திறந்து வைக்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி-கோவில்பட்டிஇடையே பழுதடைந்த சாலைகள் செப்பனிடப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே கோவில்பட்டியில் புதிதாக திறக்கப்படும் கட்சி அலுவலக கட்டிடத்தை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.
அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்சித் தலைமையின் ஒப்புதலோடு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலரின் பங்களிப்புடன் கோவில்பட்டி நகர திமுக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருவுருவ சிலையும், அலுவலகத்தின் ஒரு பகுதியில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அறிவாலயத்தில் இருந்து நூலகத்திற்கான அத்தனை புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. வரும் 28ஆம் தேதி மாலையில் நடைபெறும் விழாவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ சிலையையும் திறந்து வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.







