கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் வாழை நடும் நூதன போராட்டம்

கோவில்பட்டியில் மோசமான நிலையில் உள்ள மந்தித்தோப்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வாழை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்களுடன் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
இது பற்றி பலமுறை கோரிக்கை விடுத்தும், சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குண்டும் குழியுமான சாலையில் வாழை நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மந்தித்தோப்பு சாலை புனித ஓம் பள்ளி அருகில் நடந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம், நகர உதவிச் செயலாளர்கள் அலாவுதீன்,விஜயலட்சுமி,தாலுகா உதவிச் செயலாளர் ராமகிருஷ்ணன், நகரப் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
தாலுகாக்குழு உறுப்பினர்கள் ரஞ்சிதம், மணிகண்டன், ஆட்டோ சங்க நிர்வாகி சுரேஷ்குமார் உட்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு, குண்டும் குழியுமாக உள்ள மந்தித்தோப்பு சாலையில் வாழைக்கன்றுகள் நட்டு, சாலையை சீரமைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.







