நான் தனி ஆள் கிடையாது., பெண்கள் -இளைஞர் படையின் சகோதரன்; நாகை பிரசாரத்தில் விஜய் பேச்சு


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நாகையில் 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். நாகை பிரசாரத்திற்காக சென்னையில் இருந்து இன்று காலையில் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய், அங்கிருந்து தனது பிரசார வாகனத்தில் நாகை புறப்பட்டார். இந்த நிலையில் நாகை புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதிக்கு வருகை தந்த விஜய் பிரசார வாகனத்தில் இருந்தபடியே , அங்கு கூடி இருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-
அண்ணாவுக்கு வணக்கம். பெரியாருக்கு வணக்கம். நாகூர் ஆண்டவர் அன்போடு, நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு, கடல்தாய் மடியில் இருக்கிற என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணிலிருந்து பேசிக் கொண்டு இருக்கிறேன். என்றும் மீனவ நண்பனாக இருக்கிற விஜய்யின் அன்பு வணக்கம்.
எந்த பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கிற ஊர் நாகப்பட்டினம். மதவேறுபாடு இல்லாத, அனைவருக்கும் பிடித்துப்போன, மதசார்புகளற்று வாழும் மக்கள் நாகை மக்கள். மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம். குடிசைப் பகுதிகள் அதிகம் இருக்கும் ஊர் நாகப்பட்டினம்.
இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணம், தீர்வு குறித்தும் மதுரை மாநாட்டிலேயே பேசியிருந்தேன். மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும், அவர்களோடு நிற்பதும் நமது உரிமை; கடமை. விஜய் களத்துக்கு வருவது ஒன்றும் புதிதில்லை. முன்பு விஜய் மக்கள் இயக்கமாக வருவோம். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம்.

அதென்ன சனிக்கிழமைகளில் பிரசாரம் என விமர்சனம் செய்தார்கள். முக்கியமாக உங்கள் வேலைக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக விடுமுறை நாட்களில், ஓய்வு நாட்களில் வருவதுதான் திட்டம். அரசியல் சிலருக்கு நாம் ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா.. அதனால்தான் ஓய்வு நாட்களில் திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகிறோம்.
ஆனால் உங்களை பார்க்க வரும்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். உங்களிடம் நான் பேசுவதே 3 நிமிடங்கள்தான். அப்போது அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது என்கிறார்கள். அரியலூரில் கரண்ட்டை கட் செய்கிறார்கள். பிரதமரோ, உள்துறை மந்திரியோ வரும்போது இதுபோல் கட்டுப்பாடுகள் விதிப்பீர்களா? நீங்கள்தான் மறைமுக உறவுக்காரர்கள ஆயிற்றே..
பஸ்சுக்குள்ளேயே இருக்க வேண்டும். கையை உயர்த்தக்கூடாது., மக்களை பார்த்து சிரிக்கக்கூடாது என்கிறீர்கள். மக்களிடமே கேட்கிறேன். நான் உங்களை பார்க்கக்கூடாதா? உங்கள் குறைகளை கேட்கக்கூடாதா? உங்களிடம் பேசக்கூடாதா? கொள்ளையடித்து வந்த உங்களுக்கு இவ்வளவு இருக்குமென்றால், சொந்தமாக உழைத்து வந்த எனக்கு எவ்வளவு இருக்கும். மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களை தேர்ந்தெடுத்து தருகிறீர்கள். நான் மக்களை பார்க்கக்கூடாது, பேசக்கூடாது என நினைக்கிறீர்கள்.



நான் ஒன்றும் தனி ஆள் கிடையாது., மாபெரும் பெண்கள் படையின் சகோதரன், மாபெரும் இளைஞர்களின் சகோதரன். 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் ஒன்று தவெக.இன்னொன்று திமுக. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் விட்டுவிட்டு நேரடியாக கெத்தாக தேர்தலுக்கு வாருங்கள். கொள்ளையடிக்கிற நீங்களா.. இல்லை மக்கள் வீட்டில் ஓட்டாக இருக்கும் நானா என பார்த்துவிடலாம்..
மீனவர்களுக்கு குரல் கொடுக்கும் இந்த வேளையில், நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள், இலங்கையில் இருந்தாலும் அல்லது உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும், நிற்பதும் நம் கடமை. மீனவர்களின் உயிர் எந்தளவுக்க முக்கியமோ, அந்தளவுக்கு ஈழத்தமிழர்களின் கனவுகளும், வாழ்க்கையும் நமக்கு மிகவும் முக்கியம்.
மீனவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து, கடிதம் எழுதிவிட்டு அமைதியாக போவதற்கு நாம் ஒன்றும் கபட நாடக திமுக அரசும் கிடையாது. மற்ற மீனவர்கள் ன்றால் இந்திய மீனவர்கள்; நமது மீனவர்கள் என்றால் தமிழ்நாட்டு மீனவர்கள் என்று பிரித்து பார்த்து பேசுவதற்கு நாம் பாசிச பாஜக அரசும் கிடையாது. நிரந்த தீர்வு காண்பதுதான் நமது இலக்கு. ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வரும்போதெல்லாம், இத்தனை கோடி முதலீடு என்று முதல்-அமைச்சர் சிரித்துகொண்டே சொல்வாரே! சி.எம். சார் மனதை தொட்டு சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதலீடா? இல்லை உங்கள் குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்கு போகிறதா?
இவ்வாறு விஜய் பேசினார்.







