காதல் திருமணம் செய்த பெண் கழுத்தை அறுத்து கொலை: கணவர் ஆத்திரம்
நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் அன்புராஜ் (வயது 23). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் பிரித்திகா(20) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
தொடர்ந்து 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிருத்திகாவை திருமணம் செய்துகொள்ள அவரது பெற்றோரிடம் அன்புராஜ் பெண் கேட்டார்.. இருவரும் ஒரே சமூகமாக இருந்த போதிலும், திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனது பெற்றோரின் சம்மதத்துடன் அன்புராஜ் அந்த பிருத்திகாவை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து இருவரும் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்தனர். பிரித்திகா அவரது குடும்பத்தினருடன் போனில் பேசுவது உள்ளிட்ட குடும்பத்தாருடன் உள்ள தொடர்பு அன்புராஜிக்கு பிடிக்காமல் இருந்து வந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை வருவது வாடிக்கையாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவில் பிருத்திகா தனது தாய் மற்றும் சகோதரரிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டுக்கு வந்த கணவன் அன்புராஜ் போனில் பேசியதை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அன்புராஜ் தனது மனைவி பிரித்திகா அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கீழே தள்ளினார்., வீட்டில் காய்கறி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியால் பிரித்திகாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிருத்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அன்புராஜ் மனைவி உடலை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு அருகில் உள்ள சந்திப்பு பஸ் நிலையத்திற்கு சென்றார்.. பின்னர் அங்கிருந்து புதிய பஸ் நிலையம் சென்ற அன்புராஜ், கோவில்பட்டி பஸ்சில் ஏறி வெளியூர் தப்பி செல்ல திட்டமிட்டார்,. ஆனாலும் மனம் கேட்காமல் நடந்ததை தனது சகோதரரிடம் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அன்புராஜின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அன்புராஜ், மனைவியை கொலை செய்ததாக நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நெல்லை சந்திப்பு போலீசார் விரைந்து சென்றனர். நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு ெசய்தார். பின்னர் போலீசார் பிரித்திகா உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு, கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.







