கோவில்பட்டியில், எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை `ரோடு ஷோ’
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டமாக அவர் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்,
அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து ராமநாதபுரம் பயணத்தை முடித்துக்கொண்டு முதுகுளத்தூரில் இருந்து நாளை வியாழக்கிழமை புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் வருகிறார்.

அங்கு வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது,. தொடர்ந்து விளாத்திகுளத்தில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் இரவில் கோவில்பட்டி வந்து தங்குகிறார்.
மறுநாள் 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் கோவில்பட்டியில் தீப்பெட்டி மற்றும் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்பார்க்கும் அரசு திட்டங்கள் பற்றி கேட்டறிகிறார்.

பின்னர் மாலையில் கோவில்பட்டியில் ரோடு ஷோ நடத்துகிறார்/ லட்சுமி ஆலை ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து அண்ணா பஸ் நிலையம் அருகே தேவர் சிலை வரை ரோடு ஷோ நடத்தி பொதுமக்கள் சந்திக்கிறார், பின்னர் அங்கு நடக்கும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
பின்னர் தூத்துக்குடி செல்கிறார். நகர எல்லையில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவில் தூத்துக்குடியில் தங்குகிறார். மறுநாள் சனிக்கிழமை தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் வழிபாடு நடத்துகிறார். அன்று மாலையில் திருச்செந்தூர் தொகுதிக்கு செல்கிறார். அங்கு பிரசாரம் முடித்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மக்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். பின்னர் நெல்லை புறப்பட்டு செல்கிறார்.







