திடீர் நெஞ்சுவலி: மின்கம்பத்தில் மோதி பஸ்சை நிறுத்திய டிரைவர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு 7 மணியளவில் அரசுப் பஸ் செம்மறிக்குளம் நோக்கி புறப்பட்டது.
குலசேகரன்பட்டினம் வடக்கூரைச் சோ்ந்த ஜெயசிங் மகன் அல்டாப் (வயது 48) என்பவர் பஸ்சை ஓட்டினாா். அரசு மருத்துவமனையை தாண்டி பஸ் வந்த போது டிரைவர் அல்டாப்புக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால் அவரது கட்டுப்பாட்டைவிட்டு பஸ் விலகியது. இதையடுத்து சாலை ஓரத்தில் இருந்த இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்ற வட மாநிலத் தொழிலாளி தினேஷ் என்பவரும் தும் மோதி, அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது.

இதில் மின் கம்பம் உடைந்து விழுந்தது. பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. தகவலறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், ஆய்வாளா் இன்னோஸ்குமாா் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று அரசுப் பஸ் டிரைவர் மற்றும் , காயமடைந்த வட மாநில தொழிலாளியையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின் வட மாநில தொழிலாளியை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மின்கம்பத்தில் பஸ் மோதியதால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மின்வாரியத்தினா் விரைந்து வந்து பஸ்ஸை அகற்றி மின் வழித்தடத்தை சீரமைத்தனா். .
நெஞ்சுவலியால் துடித்தபோதும், பஸ்ஸை சாலையோரம் நிறுத்த டிரைவர் அல்டாப் முயற்சி செய்துள்ளார். ஆனால் மின்கம்பத்தின் மீது பஸ் மோதி நின்றதாக பயணிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







