கோவில்பட்டியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
2024-25-ம் ஆண்டு மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். 2024-25-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. விவசாயிகள் பாசனத்துக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பயிர் காப்பீட்டில் 5 ஆண்டு சராசரி விளைச்சல் என்ற கணக்கெடுப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராமசுப்பு தலைமை தாங்கினார்.. மாவட்ட செயலாளர் புவிராஜ், மாவட்ட துணை செயலாளர் சுப்பையா(எ)மணி, மாவட்ட துணைத் தலைவர் ராமசுப்பு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் மற்றும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த முனியசாமி, செல்லப்பெருமாள், அய்யனார், கருப்பசாமி, பாலமுருகன் உட்பட திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.







