நடிகை சரோஜாதேவி காலமானார்; முதல் அமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
தமிழ் திரைப்பட உலகில் 1960 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.
கன்னடத்து பைங்கிளி , அபிநய சரஸ்வதி அழைக்கப்பட்ட அழைக்கப்படும் சரோஜா தேவி பெங்களுருவில் பிறந்தவர். சிறு வயது முதல் சரோஜா தேவி நடனம் பயின்று வந்துள்ளார். அப்போதிலிருந்தே அவருக்கு கலைத்துறை மீது விருப்பம் இருந்தது
1955 ஆம் ஆண்டு வெளியான மஹாகவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சரோஜா தேவி. அவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் சரோஜா தேவிக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது.

நடிப்பு, நடனம், அபிநயம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய சரோஜா தேவி. 1957 ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்,. அதில் வரும் ஒரு நடன காட்சி அவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது.
தமிழில் மட்டுமல்லாமல் சரோஜா தேவி பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் -இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த ஒரு சில நாயகிகளில் சரோஜா தேவி மிக முக்கியமானவராக இருந்தார். எனவே பல மொழிகளில் சரோஜா தேவி நடித்து வந்ததால் அவருக்கு பல மொழி ரசிகர்கள் இருந்தனர்.
அந்த சமயத்தில் தான் சரோஜா தேவியின் நடிப்பை பார்த்து எம்.ஜி.ஆர் அவர்கள் அவரை நாடோடி மன்னன் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் சரோஜா தேவிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. எம்.ஜி.ஆர் படத்தில் நாயகியாக நடித்தது ஒருபக்கம் இருந்தாலும், எம்.ஜி.ஆர் படத்தில் நடித்து தனி கவனம் ஈர்த்தார் சரோஜா தேவி. அவருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.
200 படங்களில் சரோஜா தேவி நடித்திருக்கிறார். அதில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாகும். மேலும் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, கலைமாமணி உட்பட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார் சரோஜா தேவி. கடைசியாக தமிழில் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஆதவன் என்ற திரைப்படத்தில் நடித்தார் சரோஜா தேவி.

சரோஜா தேவியின் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து இரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி.
தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சரோஜாதேவி அம்மையார்.
சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவியின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது







