பள்ளிக்கூட வேன் மீது ரெயில் மோதியது; 3 மாணவ,மாணவிகள் பலி

கடலூர் செம்மங்குப்பம் அருகே பள்ளிக்கூட வேன் ஒன்று மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.
அப்போது அந்த வழியே சிதம்பரம் நோக்கி சென்ற ரெயில், பள்ளிக்கூட வேன் மீது மோதியது.இதில் வேனின் ஒருபகுதி நொறுங்கியது.

மேலும் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதை பார்த்து பதறிப்போன அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த கோர விபத்தில், 2 மாணவர், ஒரு மாணவி என 3 பேர் பலியாகினர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்திற்கு முக்கிய காரணம்,ரெயில்வே கேட் மூடப்படாத்து தான். ரெயில் வரும்போது ரெயில்வே கேட்டை மூடுவதற்காக இருந்த ரெயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடவில்லை என கூறப்படுகிறது. அவர் பணியின்போது தூங்கியதில் ரெயில் வரும்போது கேட் மூடாமல் விடப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, ரெயில்வே கேட் கீப்பர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் இது பற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.







