மூளையில் ரத்த கசிவு, சிகரெட்டால் சூடு: கோவில் காவலாளி அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார் (வயது 27). நகைத்திருட்டு வழக்கு தொடர்பாக, அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், அவரை கடுமையாக தாக்கினர். இதில் மயங்கி விழுந்து அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இதில் தொடர்புடையதாக கூறப்படும் தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.
மேலும் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆஷிஸ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, போலீசாருக்கு சரமாரி கேள்விகளை கேட்டு, கடும் கண்டனத்தையும் பதிவு செய்தது. இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். போலீசாரின் அத்துமீறிய தாக்குதலே இந்த மரணத்துக்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அஜித்குமார் உடலின் வெளிப்புறத்தில் சிராய்ப்பு காயங்கள் என 44 காயங்களும், ரத்தகட்டுக் காயங்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதும், சிகரெட்டால் சூடு வைத்ததும் அம்பலமாகி உள்ளது.
இதுதொடர்பான வெளியான தகவல்படி, சுமார் 50 வெளிப்புற காயங்கள். இதில் 12 சிராய்ப்பு காயங்கள். மீதி அனைத்தும் ரத்த கட்டு எனும் கன்றிய காயங்கள்.
கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் வெறும் ஒற்றை காயங்கள் அல்ல. காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளன.

வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயம் உள்ளது. தலை கபாலத்தில் அடியும், உள்ளே மூளையில் ரத்த கசிவும் உள்ளது. சிகரெட் சூடு வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளது (இது மிக தீவிரமான சித்ரவதை முறைகளில் ஒன்று. இது முற்றிலும் மனித உரிமைகளை மீறும் செயல். சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது.
காவல் சித்ரவதை அல்லது சட்டவிரோத விசாரணைகளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் காயங்கள் ஏற்படுவது அதீதமான வன்முறையை காட்டுகிறது. சிராய்ப்பு காயம் என்பது தோலில் சுரண்டல், உராய்வு அல்லது தடிமனாக்கம் போன்ற காயங்கள். இது நகத்தால் கீறுதல் தரையில் இழுத்தல், அல்லது கடினமான பொருளால் தாக்குதல் என்பவற்றால் ஏற்படலாம்.
ரத்தக்கட்டு என்பது உடலில் உள்ள சதையை கடுமையாக அடித்ததனால் ஏற்படும் நீல/கருப்பு நிறமான காயம். இது தாக்குதலின் இடத்தில் நரம்பு நசைப்பு, சதை அடிதடி போன்ற தாக்கங்களை விளக்குகிறது.
பல்வேறு விதங்களில், பல்வேறு பொருட்களால் இரும்பு பிளாஸ்டிக் பைப் ரப்பர் போன்ற ஆயுதங்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.
தலையில் ஏற்பட்ட படுகாயம். கபால எலும்பில் அடிபட்டால், அது மூளை பாதிப்பிற்கும் வழிவகுக்கலாம். இது பிரேத பரிசோதனைக்கு மிக முக்கியமான விஷயம். மரணம் நேர்ந்ததற்கான நேரடி காரணமாக இது இருக்க வாய்ப்பு அதிகம்.
இந்த சித்ரவதை திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடந்து இருக்கக்கூடியது. உடல் முழுவதும் தாக்கங்கள் இருப்பதால், தனிநபரால் மட்டும் செய்யப்பட்டது எனச் சொல்ல முடியாது.இது தீவிர காவல் சித்ரவதை, மற்றும் சட்டவிரோத விசாரணை, அல்லது படுகொலை எனக் உறுதி படுத்தும் வகையில் உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







