அதிமுக கிளை செயலாளர் லாரி ஏற்றி கொலையா? போலீஸ் தீவிர விசாரணை
கொலை செய்யப்பட்டவர்,
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே உள்ள கொல்லம்பரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். இவரது மனைவி வள்ளியம்மாள். கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை கொல்லம்பரும்பு பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
.முத்து பாலகிருஷ்ணன் அந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் அவர் அதிமுக கிளை செயலாளராகவும் இருந்தார்..

அந்தப் பகுதியில் சுமார் 650 ஏக்கரில் கல் குவாரி ஒன்றை ரியல் எஸ்டேட் தொழில் மூலம் ஒரு நபருக்கு முத்து பாலகிருஷ்ணன் முடித்துக் கொடுத்துள்ளார். மேலும் முத்து பாலகிருஷ்ணன் மற்றும் பஞ்சாயத்து தலைவி கவுரியின் கணவரும் திமுகவை சேர்ந்த கருணாகரன் என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் மற்றும் தொழில் போட்டி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருணாகரன் ஊரில் வைத்து முத்து பாலகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. தனது மனைவி கவுரி பஞ்சாயத்து தலைவியாக இருந்தாலும் கருணாகரனே பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று காலை முத்து பாலகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் சந்திரகிரி அருகே வந்த போது எதிரே வந்த கல்குவாரி டிப்பர் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்து பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து ஓட்டப்பிடாரம் போலீசார் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முத்து பாலகிருஷ்ணனின் உறவினர்கள் இந்த சம்பவம் விபத்து கிடையாது, அவரை பஞ்சாயத்து தலைவியின் கணவரான கருணாகரன் லாரி ஏற்றி கொலை செய்துவிட்டார். எனவே அவரை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சவுந்தர்ராஜன் என்பவரை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர். முத்து பாலகிருஷ்ணன் விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







