தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.; மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம்
மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெற்றது.
பாண்டி கோவில் அம்மா திடலில் முருகனின் பிரமாண்ட தோற்றத்துடன் நுழைவு வாயில், திருப்பரங்குன்றம் மலையையும், வேல் ஏந்தியவாறு முருகப்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது போலவும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை,இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன்,அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.பி., உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு:-
*திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
*பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்.
*திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.
*தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும்.
*தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்.
*சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது;
இந்த மாநாடு நடக்கக் கூடாது என்று ஒரு கோஷ்டி இருக்கிறது. நமது மாநிலத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஒருவர் விரதம் இருப்பதாக சொன்னார்கள். எதற்கு விரதம் என்றால், இந்த மாநாட்டுக்கு கூட்டம் வரக் கூடாது என்று வேண்டி விரதம் இருக்கிறாராம். அப்படியாவது, முருகன் மீது நம்பிக்கை இருக்கிறது என்று பெருமைப்படுவோம்.
நமக்கு இந்த மாநாட்டிற்கு எப்படி விளம்பரம் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அதிகளவில் விளம்பரம் தேடி தந்த திருமாவளவன், வைகோ, சேகர்பாபு ஆகியோர் நல்ல விளம்பரம் தேடிக் கொடுத்துள்ளனர். விளம்பரம் தேடிக் கொடுத்த அமைச்சர் சேகர்பாபுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.







