எட்டயபுரம் அருகே தாய்-மகள் கொலை :காட்டுப்பகுதியில் பதுங்கிய நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸ்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரம் கிராமத்தில் பூவன் மனைவி சீதாலட்சுமி(வயது 70), மகள் ராமஜெயந்தி(48)ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். ராமஜெயந்தியின் தந்தை இறந்து விட்ட நிலையில், கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார்.
கடந்த 3-ந்தேதி தாய்-மகள் இருவரும் தலையணையால் கழுத்து பகுதியில் அமுக்கி கொலை செய்யப்பட்டனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இரட்டை கொலையை தொடர்ந்து இருவரும் அணிந்திருந்த 13 பவுன் தங்க நகைகளை கழற்றிகொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்,
மறுநாள் நீண்டநேரமாக வீட்டு கதவு திறக்கபப்டாததால் போலீசுக்கு தகவல் செல்ல, அவர்கள் நேரில் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதுதான் தாய்-மகள் கொலை விவரம் வெளியே தெரிய வந்தது.
கொலையாளிகள் பற்றிய விவரம் எதுவும் தெரியாத நிலையில் இவருடைய உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலையாளிகள் தேடும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் முடுக்கி விட்டார்.
இந்த நிலையில் இரட்டை கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி முனீஸ்வரன் என்பவர் முத்துலாபுரம் வைப்பாற்று படுகை காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். டிரோன் மூலம் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது போலீஸ் பிடியில் சிக்காமல் தப்ப முயன்ற முனீஸ்வரனை போலீசார் பிடிக்க முயன்றனர்.
அப்போது அந்த நபர் தாக்கியதில் குளத்தூர் உதவி ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் போலீஸ்காரர் ஜாய்சன் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கியால் முனீஸ்வரன் இடது காலில் சுட்டு பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நகைக்காக தாய் -மகள் கொலை செய்யப்பட்ட்டார்களா? அல்லது வேறு காரணம் எதுவும் உண்டா என்று தீவிர விசாரணை நடக்கிறது கொலை சம்பவத்தில் வேறு யாரெல்லாம் தொடர்பு என்பதையும் பொலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் , காவலர் ஜாய்சனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களின் துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் உடன் இருந்தார்.







