ஆஹா… சமையல்….!

குட்டீசுக்கு பிடிச்ச மாதிரி சிக்கன் பிரை
தேவையான பொருட்கள்: சிக்கன் 1/2 கிலோ , காஷ்மீர் சில்லி பொடி – ஒரு தேக்கரண்டி, மல்லித்தூள் ஒரு தேக்கரண்டி.மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி. தயிர் இரண்டு மேசைக்கரண்டி. மிளகுத்தூள் அரை தேக்கரண்டி.
செய்முறை: சிக்கனுடன் மேலே உள்ள மசாலாக்களை பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு கடாயில் தேங்காய் எண்ணெயில் இரண்டு மேசைக்கரண்டி சேர்த்து வறுத்து எடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்

புசுபுசு ஆப்பமும் … மத்தி மீன் குழம்பும்
ஒரு மண் பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்து பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு, நீள்வாக்கில் வெட்டிய பூண்டு பத்து சேர்த்து நன்கு வதக்கவும்
நான்கு தக்காளியை அரைத்து சேர்க்கவும்,நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து சேர்க்கவும் மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி மல்லித்தூள் இரண்டு மேசைக்கரண்டி மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி தேவையான அளவு உப்பும், தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து நன்கு பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்
நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது 500 கிராம் மீனை சேர்த்து 10 முதல் 15 நிமிடம் குறைந்த தீயில் வைத்து நன்கு கொதிக்க விடவும்
இறுதியாக கருவேப்பிலை தூவி இறக்கவும்

பீர்க்கங்காய் கிரேவி
ஒருமுறை இந்த மாதிரி பீர்க்கங்காய் கிரேவி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அப்புறம் பீர்க்கங்காய் உங்களோட favorite ஆயிடும்
செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளித்து, நீள்வாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து வதக்கவும்
வெங்காயம் வதங்கியவுடன் ஒரு தக்காளியை நறுக்கி சேர்க்கவும் ஒரு பீர்க்கங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி சேர்க்கவும் மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கவும்
அரைப்பதற்கு: தேங்காய் அரை கப், தயிர் ஒரு மேசைக்கரண்டி, மூன்று பல் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
காய் வெந்தவுடன் அரைத்து விழுதுகளையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
பச்சை வாசம் நீங்க எண்ணெய் பிரிந்து வந்தவுடன் மல்லி இலைகள் தூவி பரிமாறவும்
இந்த கிரேவி சப்பாத்தி இட்லி, தோசை சாதம் என அனைத்திற்கும் ஏற்றவாறு இருக்கும்
___
