சீனாவில் ரஜினியின் வசூலை முறியடித்த விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம்
சீனாவில் திரையரங்குகள் அதிகம் என்பதால், எப்போதுமே ஒரு தமிழ் படம் வெளியானால் வசூல் விவரங்கள் ஆச்சரியப்படுத்தும். அந்த வரிசையில் ‘மகாராஜா’ படத்தின் வசூலை பார்த்து வர்த்தக நிபுணர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ படத்தின் வசூலை 4 நாட்களில் கடந்துவிட்டது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’.
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்டி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மகாராஜா’. தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றது.பல்வேறு நாடுகளில் முதல் 10 இடங்களில் இடம்பெற்று சாதனையை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் 40,000 திரையரங்குகளில் வெளியான மகாராஜா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இதுவரை மகாராஜா திரைப்படம் 26.26 கோடி வசூலித்துள்ளது. சீனாவில் ‘2,0’ திரைப்படம் ஒட்டுமொத்தமாக 26 கோடி ரூபாய் தான் வசூலித்தது. தற்போது அதை தாண்டி சாதனை புரிந்திருக்கிறது ‘மகாராஜா’ திரைப்படம். மேலும், சீனாவை தொடர்ந்து ஜப்பான் நாட்டிலும் ‘மகாராஜா’ வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.







