உத்தரபிரதேசத்தில் மண்சரிவு: 4 பெண்கள் பலி
உத்தரபிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் உயிருடன் புதைந்து பலியாகி உள்ளனர். மேலும் பல பேர் காயமடைந்து உள்ளனர். கோட்வாலி காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குறித்து கஸ்கஞ்ச் மாவட்ட மாஜிஸ்திரேட் மேதா ரூபம் கூறுகையில், “மண் சரிவில் இருந்து மொத்தம் 9 பெண்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர், அவர்களில் 4 பேர் மாவட்ட மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் காயமடைந்துள்ளனர்” என்று அவர் கூறினார். இதுதொடர்பாக அப்பகுதியில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மண் சரிவில் சிக்கி, உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.