விஜய் வெற்றி பெறுவது கஷ்டம்: ரஜினிகாந்த் சகோதரர் சத்தியநாராயண ராவ்
தமிழக திரையுலகில் நடிகா் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகா்களை கொண்ட நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகத்தை ஓராண்டுக்கு முன்பே தொடங்கி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தவெக வின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருப்பதும், லட்சக்கணக்கில் தொண்டா்களை திரட்டியதும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த சூழலில், அரசியலில் நடிகர் விஜய் வெற்றி பெறுவது கஷ்டம் என ரஜினிகாந்த் அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார். மதுரையில் ரஜினி ரசிகர் ஒருவரின் இல்ல நிகழ்விற்கு வருகை தந்த ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது சத்திய நாராயண ராவ் கூறியதாவது:-
தமிழக மக்கள் நடிகர் விஜய்யை அரசியலில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். “வரட்டும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கமல்ஹாசன் பண்ணியதுபோல் அவரும் பண்ணட்டும். ஆனால் பிரயோஜனம் இல்லை. அவரலால் சாதிக்க முடியாது. வெற்றி பெறுவது கஷ்டம்.
விஜயகாந்தை மக்கள் ஏற்றுக்கொண்டது போல் அவரை ஏற்று கொள்வார்களா என்பதை மக்களிடம் தான் கேட்க வேண்டும். அதேசமயம் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் அரசியலுக்கு வருவதால் அவருக்கு வீண் சிரமம்தான் ஏற்படக்கூடும். இன்னும் கொஞ்சம் நாள் பார்த்தால் தெரிந்துவிடும்.
ரஜினிகாந்துக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. எனவே அந்த கேள்விகளை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இவ்வாறு சத்திய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.







