அமைச்சரவை மாற்றம் எப்போது ? மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

அமெரிக்காவில் 14 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக் கொண்டு சிகாகோ நகரில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:-முதலீட்டு ஒபந்தங்கள் தொடர்பாகவும், வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாகவும், வெள்ளை அறிக்கைகள் வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்களே?
பதில்:-அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே உங்களை சந்தித்து தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டு காலத்தில் வந்த முதலீடுகள் பற்றி நான் விளக்கமாக சொல்லி இருக்கிறேன். அது மட்டுமல்லாமல், தொழில் துறை அமைச்சரும் புள்ளி விவரங்களோடு விளக்கி இருக்கிறார். சட்டமன்றத்திலும் அவர் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதை எதிர்க்கட்சி தலைவர் மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமி படித்து பார்த்து தெரிந்து கொள்ள சொல்ல வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு போனதாக சொன்னார்கள். அதில் 10 விழுக்காடு ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அதை சொன்னால் உள்ளபடியே அவருக்கு பெரிய அவமானமாக இருக்கும். அதனால் அதை தவிர்த்து விடுகிறேன்.
கேள்வி:-அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொல்லி இருந்தீர்கள்? அமைச்சரவை மாற்றம் நிகழுமா?
பதில்:- தி.மு.க. என்பது சொன்னதை தான் செய்யும். சொல்வதைதான் செய்வோம். ஒரே வரியில் சொல்லி விடுகிறேன். இன்றைக்கு 75-ம் ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் தி.மு.க. பவள விழாவை கொண்டாட இருக்கிறது. ஆக நிச்சயமாக உறுதியாக நீங்கள் எதிர்பார்க்க கூடிய சூழ்நிலை உருவாகும் என்று நம்புகிறேன்.
கேள்வி:-விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இது அரசியல் கலந்த பேசும் பொருளாகி இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் ஏதும் ஸ்திரதன்மை இல்லையா? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
பதில்:-அதுபற்றி திருமாவளவளனே விளக்கம் சொல்லி இருக்கிறார். அந்த விளக்கத்துக்கு பிறகு நான் பெரிய விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி:-அமெரிக்க பயணம் வெற்றி என்று சொல்கிறீர்கள்? அதே சமயத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் ஈர்த்த முதலீட்டை நீங்கள் முதலீடு ஈர்த்தது வெறும் 7 ஆயிரம் கோடிதான் என்று சொல்கிறாரே?
பதில்:-அப்படியல்ல. அவங்க மாநிலத்துக்கு அவர்கள் தட்டிக் கேட்க உரிமை இருக்கிறது. அதே போல் நாங்களும் நம்முடைய மாநிலத்துக்கு என்னென்ன வேண்டுமோ என்ன என்னென்ன வசதி ஏற்படுத்த வேண்டுமோ அதை கேட்கிறோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
