பண மோசடி சம்பவங்கள்: மீட்கப்பட்ட பணம் திரும்ப ஒப்படைப்பு
கோவில்பட்டி ராஜீவ்நகரை சேர்ந்த மாரியப்பசாமி என்பவரின் மனைவி ரேகா என்பவரது செல்போனில் டெலிகிராம் செயலியில் பகுதி நேர வேலைவாய்ப்பு சம்மந்தமாக செய்தி வந்ததாகவும், அதன் மூலம் அடையாளம் தெரியாத நபருடன் தொடர்பு கெண்டு இணையதளத்தில் Product Rating கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியதை நம்பி தனது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 14,12,849/- பணம் அனுப்பி ஏமாற்றப்பட்டதாக மேற்படி ரேகா அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோன்று தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த செலஸ்டன் மகன் பனிமய கிளாட்வின் மனோஜ் என்பவரை அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து வெளிநாட்டில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு மருந்து ஏற்றுமதி செய்யும்மாறு கூறியதை நம்பி ரூபாய் 36,98,800/- பணத்தை தனது வங்கி கணக்கிலிருந்து அனுப்பி ஏமாற்றப்பட்டதாக மேற்படி பனிமய கிளாட்வின் மனோஜ் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தூத்துக்குடி ரஹமத்துல்லாபுரம் பகுதியை சேர்ந்த முகமது அப்துல் காபர் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ரூ. 1 லட்சத்தை மேற்படி முகமது அப்துல் காபர் தனது வங்கி கணக்கிலிருந்து கொடுத்து ஏமாற்றப்பட்டதாக முகமது அப்துல் காபர் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி சைபர் குற்ற சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்ற பிரிவு போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு, நீதிமன்றம் மூலம், மோசடி செய்யப்பட்ட மொத்தம் ரூ 13,36,530/- திரும்ப பெறப்பட்டு மீட்கப்பட்டது.
மேற்படி மீட்கப்பட்ட பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட காவல்துறை கூட்ட அரங்கில் வைத்து மேற்படி பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்.
அப்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர்கள் அச்சுதன், சுதாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.







