கோவில்பட்டியில் வட மாநில மொத்த வியாபாரிகளால் வாழ்வாதாரம் இழந்த கைபேசி சில்லறை விற்பனையாளர்கள் முற்றுகை போராட்டம்
கோவில்பட்டியில் வட மாநில மொத்த வியாபாரிகள் மொத்த வியாபாரம் செய்து வந்த நிலையில் தற்போது சில்லறை வியாபாரத்தில் பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
இதனால் 150 க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக கடந்த ஜனவரி 2 அன்று காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மொத்த வியாபாரிகள் இனி சில்லறை வியாபாரம் செய்ய மாட்டோம் என காவல்துறையினரிடம் எழுதிக் கொடுத்தனர்.
ஆனாலும் தொடர்ந்து சில்லறை வியாபாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டி கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில இணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் அசோகன், ஆகியோர் தலைமையில் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி நகர கைபேசி உரிமையாளர்கள் நல சங்க தலைவர் சோலையப்பன் செயலாளர் அமர்நாத் பொருளாளர் குருசாமி பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் துணை கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.








